பத்து வயது சிறுமி ஒருவரை கடத்த முற்பட்ட ஒருவரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது. 10 வயதுடைய சிறுமி ஒருவர் பாடசாலையில் இருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். 11 ஆம் வட்டாரத்தின் Avenue Jean Aicard வீதியில் உள்ள அவரது வீட்டினை நெருங்கியிருந்தபோது, மகிழுந்தில் வந்த நபர் ஒருவர் அச்சிறுமியை நெருங்கியுள்ளார். பின்னர் சிறுமியிடம் பேச்சு கொடுத்து அவரை மகிழுந்துக்குள் ஏறும்படி கேட்டுள்ளார். ஆனால் அச்சிறுமி சத்தமாக கத்திக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
அதையடுத்து, மகிழுந்தில் வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து குறித்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், சில நாட்களின் பின்னர், இவ்வார திங்கட்கிழமை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சிறுமியை கடத்த முற்பட்டது ஏன் என்பது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.