உக்ரைனில் யுத்தப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களை மீட்க, மனிதாபிமான மீட்பு நடவடிக்கை ஒன்றை மக்ரோன் அறிவித்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கு கடற்கரை நகரமான மரியுபோல் (Marioupol) நகரில் ஒன்றரை இலட்சம் வரையான மக்கள் சிகிக்கொண்டுள்ளனர். இப்பகுதியில் இரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மக்கள் உயிராபத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ‘அவசரகால மனிதாபிமான மீட்பு நடவடிக்கை’ (opération humanitaire exceptionnelle) ஒன்றை ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ளார்.

இந்த மீட்பு பணியில் உக்ரைனின் அண்டைய நாடுகளான கிரீஸ் மற்றும் துருக்கியையும் உதவிக்கு அழைத்துள்ளது பிரான்ஸ்.

இந்த மீட்புப் பணியின் போது, தாக்குதலை நிறுத்துவதற்கு இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சம்மதத்தை கோரியுள்ளதாகவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ப்ரெஸ்லஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் இரண்டாம் நாள் சந்திப்பு இடம்பெற்றது. இதன் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக இம்மானுவல் மக்ரோன் 45 நிமிடங்கள் உரையாற்றினார். அதன்போதே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.